கட்டுரைகள்

அவமானமா,  அனுகூலமா...

11 முட்டாள்கள் விளையாடுவதை 11 ஆயிரம் முட்டாள்கள் பார்க்கின்றனர்'' என்று  கிரிக்கெட்டைப் பற்றி கூறினார் பெர்னார்ட் ஷா

ஆர். வேல்முருகன்

""11 முட்டாள்கள் விளையாடுவதை 11 ஆயிரம் முட்டாள்கள் பார்க்கின்றனர்'' என்று  கிரிக்கெட்டைப் பற்றி கூறினார் பெர்னார்ட் ஷா. ஆனால் இன்று பல கோடிப் பேர்  இவ்விளையாட்டைப் பார்க்கின்றனர்.

  இந்தியன் என்ற முறையில் கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை இந்தியா வென்றது  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்திய அணிக்குக் கொடுக்கப்பட்ட கோப்பையால் ஏற்பட்ட சர்ச்சையால் கிரிக்கெட்டை ஏன் இந்தியாவில் தடை செய்யக்கூடாது என்ற எண்ணமே தோன்றுகிறது.

 கோப்பையை வென்றதற்காகப் பல்வேறு மாநில அரசுகள் ரொக்கப் பரிசுகளை வீரர்களுக்கு அள்ளியள்ளி வழங்குகின்றன. வேறு பிரிவுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மாநில அரசுகள் கிள்ளியாவது கொடுத்தனவா என்பது சந்தேகமே.

  64 கட்டங்களில் மூளையைக் கசக்கி விளையாடும் சதுரங்கத்தில், இந்தியாவின் - குறிப்பாக தமிழகத்தின் - விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியபோது எத்தனை மாநில அரசுகள் அவருக்கு ரொக்கப் பரிசளித்தன, பாராட்டின?

  விஸ்வநாதன் ஆனந்துக்கு ஹைதராபாதில் கெüரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்குக் கூட மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அனுமதியளிக்கவில்லை. அவர் இந்தியரா என்ற சந்தேகத்தைக் கிளப்பியது. இதைப் போல கிரிக்கெட் வீரர்களுக்கு நடக்குமா? நடந்தால் ரசிகர்கள்தான் விடுவார்களா?

  கேரம் விளையாட்டில் சாதனை படைத்த தமிழக வீராங்கனை இளவழகி, சாதாரணச் சூழ்நிலையைப் பின்னணியாகக் கொண்ட செஸ் விளையாட்டு வீராங்கனை சரண்யா பற்றி எத்தனைப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன? இதைப்போல இன்னும் எத்தனையோ உதாரணங்கள்.

 அதிகத் திறமை, தகுதி இருந்தும் உரிய அங்கீகாரம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் பல நூறு பேர் இந்தியாவுக்காக சத்தமின்றி சாதனை படைத்து வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் கிடைக்காத அங்கீகாரம், கிரிக்கெட் வீரர்களை இந்தியாவில் கடவுளாகப் பார்க்க வைத்துள்ளது.

 ஏற்கெனவே, கிரிக்கெட் போட்டியில் "மேட்ச் பிக்ஸிங்' சமாசாரம் புகைந்து கொண்டிருக்கும்போது இப்போது புதிதாக ஐ.பி.எல்.லில் "ஸ்பாட் ஃபிக்ஸிங்' விவகாரம்.

  வீணாகப் போகும் தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கக்கூட மனமில்லாத மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உலகிலுள்ள மிகப் பணக்கார அமைப்புகளில் ஒன்றான ஐ.சி.சி.க்கு வரிச் சலுகை. இது யாரைச் சமாதானப்படுத்துவதற்காக?

  ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதால்தான் ஐ.பி.எல். போட்டிகளில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி, போலீஸôரின் சம்மனுக்குக்கூட மரியாதை கொடுக்காமல் சுதந்திரமாகச் செயல்படுகிறார்.

  இப்போது ஐ.பி.எல். போட்டிகளில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள், நடுவர்கள், அணி நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எத்தனை கோடிப் பேர் தங்கள் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் பார்க்கின்றனர்? அவர்கள் அனைவரையும் ஏமாற்றி, தங்கள் வாழ்வு மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்து "ஸ்பாட் ஃபிக்ஸிங்கில்' ஈடுபட்டவர்களைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  போலீஸôர் கைது செய்யும்போது கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த், தனக்கு 2 மாநில முதல்வர்களைத் தெரியும் என்று கூறி அத்துமீறி நடந்துள்ளதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. கிரிக்கெட் வீரர்களின் ஆதிக்கம் எதுவரை ஊடுருவியுள்ளது என்பதற்கு இது ஒன்றே ஆதாரம்.

  சிறிய வயதில் அதிகப் புகழும், பணமும் கிடைத்தால் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதைக் கிரிக்கெட் வீரர்களின் நடவடிக்கைகள் தெரிவிக்கின்றன.

  இப்போதாவது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில் உயர் மட்டத்தில் அரசியல்வாதிகள் இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சம்பந்தப்பட்ட அமைப்புகளை மத்திய அரசு குறைந்த காலத்துக்காவது தடை செய்ய வேண்டும். கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது பிற

விளையாட்டுகளுக்கும் கொடுத்து மத்திய அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இதைப் போன்ற அவமானங்களையும், கேவலங்களையும் சந்திக்கும் நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

  ஏற்கெனவே 2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் உள்ளிட்ட ஊழல்களால்  இந்தியாவின் பெருமை (?) உலக அளவில் பரவியுள்ள சூழ்நிலையில், ஐ.பி.எல். போட்டிகளால் அப்பெருமை (?) மேலும் பரவ வாய்ப்பளித்துவிடக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

SCROLL FOR NEXT